தொடரும் நண்பர்கள்...

Sunday, January 17, 2016

கவிதையின் கதை முன்னுரை

உலகின் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று என்பதைப் பலரும் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் கண்ட பெருமை என்பது, வேறெந்த மொழியிலும் கிடைக்காத, ஆதிமனிதர்களின் வாழ்க்கை குறித்த பதிவுகள் தமிழில் கிடைத்திருப்பதே!

இந்திய மொழிகளில்  தமிழ்போல் பழைய மொழியாக வடமொழியைச் சொல்கிறார்கள். ஆனால் வடமொழியை வழக்கில் யாரும் பேசுவதில்லை, வழக்கிலும் இருந்ததில்லை. வேதங்களில் வாழ்வதாகச் சொல்லப்படும் வடமொழியின் பொருளே திருத்தப்பட்டது –“சமஸ்கிருதம்“- என்பதாலேயே அப்பெயர் பெற்றது என்பர். ஆனால், பழந்தமிழ் இலக்கணமாம் தொல்காப்பியப் பாயிரத்திலேயே “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி..“ என வந்துள்ளதால், வழக்குமொழியே (Spoken Language)  எந்தமொழிக்கும் முன்னத்தி ஏர் எனலாம்.

தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகியவை தமிழிலிருந்தே சற்றேறக்குறைய 1,000 ஆண்டுகளின் முன்னர்த் தோன்றியிருக்கலாம் என்பதை இம்மொழிகளுக்குள் கிடக்கும் ஒற்றுமையால் மட்டுமல்ல, பழந்தமிழர் வரலாற்றாலும் அறியலாம். பண்டைச் சேர நாடே இன்றைய கேரளம் என்பதைச் சிலப்பதிகாரத்தாலும், பதிற்றுப் பத்து எனும் சங்க இலக்கிய நூல்வழியாகவும் அறியலாம். இதையே மனோண்மணீயம் எழுதிய பேராசரியர் பெ.சுந்தரனார் –
“கன்னடமும், களிதெலுங்கும், கவின்மலையா ளமும்,துளுவும்
உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!“  என்று எழுதி யிருப்பதனாலும், அறிஞர் கால்டுவெல் எழுதியிருக்கும் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்நூல்வழியாகவும் அறியலாம்.

ஆக, 
இந்தியாவின் வேறெந்த மொழிக்கும் இல்லாத பெருமை என்று நான் கருதுவது, மனிதகுல வரலாற்றின் தொடக்கக் காலச் செய்திகளை உடைய மொழி தமிழ்மொழி ஒன்று மட்டுமே என்பதே ஆகும்.

உதாரணமாக –
மனிதகுல வரலாறு கூறுவோர், மனிதனின் ஆதி வரலாற்றை நான்கு வகை வாழ்க்கையாக வகுத்துச் சொல்கிறார்கள் -
(1)    உணவு தேடும் நிலை
(2)    வேட்டை நிலை
(3)    உணவு பயிரிடும் நிலை
(4)    உபரி கண்டு வணிகம் தோன்றிய நிலை
இவை நான்குமே தமிழ் இலக்கணத்தில் வரும்
(1)    குறிஞ்சி – உணவு தேடும் மலைசார்ந்த மக்கள் நிலை
(2)    முல்லை – வேட்டையாடும் காடுசார்ந்த வாழ்க்கை
(3)    மருதம் – உணவு பயிரிடும் வயல்சார்ந்த வாழ்க்கை
(4) நெய்தல் – வணிகம் (உபரி)கண்ட கடல்சார் வாழ்க்கை
என இதனைச் சொல்லலாம். ஐந்தாவதான பாலை தமிழ்நாட்டில் இல்லை என்பதாலேயே பாலை தவிர்த்த நான்கு நிலத்தையுமே “நானிலம்“ என –உலகமெனும் பொருளில்- சொல்வதுண்டு. (பின்னர் மற்ற இடங்களில் பாலை இருப்பதால், ஐந்து நிலப்பிரிவுகளாகத் தமிழர் சொல்வாராயினர்)

தமிழிலக்கிய வரலாறே மனிதகுல வரலாற்றைக் கூறுவதாக உள்ளது, அப்போதிருந்த இலக்கிய வடிவம், கவிதையன்றி வேறில்லை என்பதால் தமிழ்க் கவிதையின் வரலாறே, மனிதகுல வரலாறு கூறுவதாக உள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

எனவே, கவிதையின் கதையே மனிதனின் கதை என்பதை கவிதை மாற்றங்களுக்கும், சமூகமாற்றங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளின் வழியாகப் பயணம் செய்தால், எளிதில் காணலாம்.

சரி, தமிழ்ச்சமூக வரலாறும் தமிழ்க் கவிதையின் வரலாறும் இணைந்தே இருப்பத்தைக் கொஞ்சம் பார்த்துவிட்டு, பிறகு நூலுக்குள் போகலாமா?

(அடுத்த பதிவுக்கு ஓரிருநாள் காத்திருங்கள்)

எனது வேண்டுகோள்!

அன்பினியீர், வணக்கம்.
எனது பெயரை
ஆங்கிலத்தில் இட்டு இணையத்தில் தேடும்
நண்பர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே
இந்த வலைப்பக்கம் உருவாக்கப்பட்டது.

இதில் எனது நெடுநாள் கனவான -
வாழ்நாள் பணியான -
“கவிதையின் கதை” யை
வாரந்தோறும் தொடர்ந்து எழுதுவேன்.

மற்றபடி,
இந்த வலைப்பக்கத்தில்
வேறெதையுதம் எழுதப்போவதில்லை.
-----------------------
உங்கள் பங்களிப்பை இதில் எதிர்பார்க்கிறேன்.
----------------------

எனவே,
நண்பர்களே,
நான் தொடர்ந்து எழுதிவரும்
பின்வரும் வலைப்பக்கத்திற்கு   வருமாறு
அன்புடன் அழைக்கிறேன் -

http://valarumkavithai.blogspot.com/ 

எனது மின்னஞ்சல் - muthunilavanpdk@gmail.com
எனது செல்பேசி எண் - 94431 93293
(இந்தியாவிற்கு வெளியிலிருப்போர் அன்புகூர்ந்து  +91 சேர்த்துக்கொள்க)

சிரமத்திற்கு மன்னியுங்கள்.
அன்புடன்,
நா.முத்துநிலவன்
நாள் - 17-01-2016