தொடரும் நண்பர்கள்...

Tuesday, February 2, 2016

கவிதை என்பது யாது? - முன்னுரை(2)

கவிதை என்பது யாது?
கவிதைக்கு இலக்கணம் 
தேவைதானா?.

இந்தக் கேள்விகள் 
பள்ளிப் பருவத்திலிருந்தே என்னைக் குடைந்ததில் 
இந்த நூல் கருக்கொண்டது.

முன்னுரையின் முதற்பகுதி படிக்காதவர்கள் படிக்கச் சொடுக்குக -

முதற்பகுதி படித்தவர்கள் தொடர்ந்து படிக்க -

தமிழ்க்கல்வியும் அது தந்த சிந்தனையும் சில பதில்களைத் தந்தன-
அவற்றில் ஒன்று – இலக்கணம் அவசியம்தான். ஆனால், இலக்கணம் இருந்தால் மட்டுமே கவிதை ஆகிவிடுமா? எனும் கேள்வியும் எழுந்தது.
எடுத்துக் காட்டாக -
“அண்ணன் என்பவன் தம்பிக்கு மூத்தவன்
“திண்ணை என்பது தெருவில் உயர்ந்தது“
இது நான்கு சீர் மற்றும் ஆசிரியப்பாவுக்கான அகவல் ஓசையும் கொண்டது என்பதாலேயே இது கவிதையாகுமா? எனும் கேள்வி சரியானது தானே?

சரி இன்னொரு புறம், இலக்கணமே சுமையாகிவிடாதா? எனும் கேள்வியும் சரியாகத்தான் தெரிகிறது. பாரதிதாசன் இலக்கணத்தோடு ஆசிரியப்பாவில்  எழுதியதைப் பலரும் கண்டுகொள்ள வில்லை!  
இரவில் வாங்கிய இந்திய விடுதலை
என்று விடியுமோ யார் அறிகுவரே? – எனும் வரிகள் பெறாத புகழை, அந்த உள்ளடக்கத்தைக் கடன் வாங்கி, முன்பின் அறியாத அரங்கநாதன் என்பவர் இலக்கணமின்றி எழுதிவிட்டுப் போன -
“இரவில் வாங்கினோம்,
விடியவே இல்லை”  எனும் இரட்டை வரி பெற்றது எப்படி? இதற்குள் இருக்கும் “விடியவே இல்லை“ என்பது முற்றிலும் சரிதானா? அல்லது எப்போதும் ஈர்ப்பைத் தரும் எதிர்க்கருத்தின் மகிமையா?

இவை இரண்டில் எது கவிதை? கேள்வி மீண்டும் தொடர்கிறதல்லவா?
இது பற்றி “கவிதையின் கதை” நூலில் தொடர்வோம்.

சரி தமிழ்க்கவிதை வரலாற்றில் மனிதகுல அல்லது தமிழ்ச்சமூகம் இணைந்து கிடக்கும் இடங்களில் முக்கியமான குறிப்புகள் சிலவற்றைப் பார்ப்போம்.
மனிதகுலத்தின்- தமிழ்ச்சமூகத்தின்- முதல் நிலை
இனக்குழு மக்கள் சமூதாயம் என்பதாகும்.
அதாவது அப்போது யாருக்கும் எதுவும் சொந்தமில்லை, கிடைக்கும் எதையும் குழுவில் இருக்கும் அனைவரும் பகிர்ந்து கொள்வதே வழக்கம். அதற்கான தலைவரும் இதற்கு விதிவிலக்கல்ல. அடுத்த குழுவுடனோ, உணவு தேடிப் போகும்போதோ மட்டுமே தலைவர் அந்த மதிப்பைப் பெறுகிறார். அதிலும் பெரும்பாலும் பெண்ணே தலைமையேற்றிருக்கிறாள்! ஏனெனில் குழந்தையின் தாயைத்தான் அடையாளம் தெரியுமே அன்றி தந்தை யாரென்று தெரியாது! அதற்குப் பெயர்தான் தாய்வழிச் சமூகம்!
தமிழ்க் கவிதையின் பழம்பெரும் புதையலான “சங்க இலக்கியம்“ தொகுப்பில் உள்ள ஆதி வடிவம் ஆசிரியப் பாவாக உள்ளது.

அதிலும் 3வரிகொண்ட ஆசிரியப் பாவால் ஆன ஐங்குறுநூறும், 8வரி வரை போகும் நற்றிணையும், 30வரி வரையான அகநானூறும், 60வரிவரையான புறநானூறும் என சங்க இலக்கியத்தின் பெரும்பாலான செய்யுள் வடிவம் அகவல் ஓசை கொண்ட ஆசிரியப்பாவாகவே உள்ளது! (சங்க இலக்கியத் தொகுப்பில் மேலும் உள்ள பிற பாவகைகள் குறித்து நூலில் பார்ப்போம்)

அகவல் என்றால் அழைப்பது. அடுத்தவரை அழைப்பதில் தானே மொழி தோன்றியிருக்க முடியும்? சைகையை அடுத்து, அழைப்பதற்குத்தானே மொழியின் பயன்பாடு தொடங்கும்?
ஆக,
நாடுகண்ட வாழ்நிலையின் ஆதி இனக்குழு வடிவமும்,
ஏடுகண்ட பாவகையின் அகவல் பாவடிவமும் ஒத்திருப்பது முதற்சான்று.

ஆனால், அடுத்து வந்த தலைமை, இனக்குழுத் தலைவர் போலில்லாமல், சற்றே மக்களைவிட்டு அந்நியமாகி, இனக்குழுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி, உணவுத் தேவைக்காக அடுத்த குழுவினைக் கொன்று அல்லது வென்று இரண்டு மூன்று குழுக்கள் ஒன்றாகி சற்றே பெரிய குழுக்கள் உருவாகி, முடிவேய்ந்த வேந்தர்கள் வேளாண்மையில் விளைந்த வேளிர்கள் சிறு மன்னர் எனச சமூக நிலை சற்றே முன்னேற மக்கள் அவல நிலைக்குத் தள்ளப் படும்போது, வாழ்நிலை சிதைவடைகிறது...

“அடுதலும் தொடுதலும் புதுவது அன்று இவ்வுலகத்து இயற்கை“ என்று ஒரு பக்கம் மன்னர்கள் சண்டை தொடர மக்கள் அலைக்கழிக்கப் பட்டனர். இது கண்ட அறநூலார்... “இப்படிச் செய்யாதே இப்படிச் செய்” என்று சொன்ன பதினெண்கீழ்க்கணக்கு அறநூல்கள் பெரும்பாலும் வெண்பாவில் அமைந்தன.
கட்டுப்பாடுகளைப் பற்றிச் சொன்ன அறநூல்கள் அனைத்தும், கட்டுப்பாடு மிக்க வெண்பாவிலேயே எழுதப்பட்டன! –இது இரண்டு!

சிறிய மீன்களை விழுங்கிப் பெருமீன்கள் வளர்ந்தன.
சிற்றரசுகளை விழுங்கிப் பேரரசுகள் எழுந்தன.
அதுவரை வேந்தர்-மன்னர்களாக இருந்தவர்களைப் பாடிய 60வரிகள் போதவில்லை! பெருவேந்தர்கள் பேரரசர்களைப் பாட இன்னும் பெரிய வரிகளைக் கொண்ட புதிய வடிவங்கள் தேவைப்பட்டன..
ஆடம்பரமான பெருமன்னர்கள், 
சொல்வல்லாரின் தேவை எழுந்த்து
விருத்தங்கள், பலநூறு-ஆயிரம் வரிகள் கொண்ட 
காவியங்கள் எழுந்தன!

பேரரசர்களைப் பாடப் 
புதிய புதிய செய்யுள்களின் அணிவகுப்பு எழுந்தது!
நமக்கே இதைச் சொல்ல 
3வரி தேவைப்படுகிறது!-இது 3ஆவது சான்று.

இனக்குழுத் தலைவர் போலில்லாமல், பெருமன்னர்களின் ஆடம்பர வாழ்க்கை முற்றிலும் மக்களைவிட்டு அகன்ற நிலையில் கொதித்துப் போன மக்களின் கொதிப்பை அடக்க விதி நம்பிக்கையை விதைக்க ஒரு கூட்டம் எழுகிறது..
“திருவுடை மன்ன்னைக் காணில் திருமாலைக் கண்டேன்என்று சொல்லி அரசனை ஆண்டவனின் அம்சம் என்று மக்களை மயக்குகிறது...மக்களை பல்வேறு வகையிலும் இசைவடிவத்தோடு இறங்கி அடிக்கிறது!

“தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்று தாழிசை, துறை, விருத்தம் இசைப்பாடலுடன் சிற்றிலக்கிய, பக்திஇலக்கியம், வளர்கின்றன!

உண்மையைச் சொன்னால் பக்தி இலக்கியக் காலத்தில்தான் பெரும்பாலான மக்களிடம் கவிதை இலக்கிய வடிவம் சென்று சேர்கிறது! அதுவரையில் மேல்தட்டு அரசர், புலவர், பாணர் என இருந்த தமிழ்ச் செய்யுள் கவிதை முதன்முதலாக பக்தி இலக்கியக் காலத்தில்தான் ஊருக்குள் வருகிறது!

மதங்களின் பெயரால் ஒன்றுபடுத்த சிறுதெய்வங்கள் எல்லாம் இணைந்து பெருந்தெய்வ மத அமைப்புகள் தோன்றுவது ஆண்டவனுக்குத் தேவையோ இல்லையோ ஆள்பவருக்கு தேவையாக இருப்பது இயல்புதானே?!

பின்னர் இதையும் மீறி, புதிய பார்வையும், சாதி-மத-மூட நம்பிக்கைகளை எதிர்த்தும், அரசரையே எதிர்த்தும் அதிரடியாக எழுந்த சித்தர்களின் குரல் மருத்துவத்தோடு, மக்களின் குமுறலையும் வெளிப்படுத்த வழக்கிலிருந்த கவிதை வடிவத்தோடு புதிய எளிய வெண்கலிப்பாக்களில் எழுதினர்...
“சாதியாவது ஏதடா மதங்களாவது ஏதடா?”
“பறச்சி யாவது ஏதடா? பார்ப் பனத்தி ஆவது ஏதடா?
“தாவாரம் இல்லை, தனக்கொரு வீடில்லை,
தேவாரம் ஏதுக்கடி குதம்பாய்?” எனும் சித்தர் பாடல்கள் சீறி எழுந்தன..

இதன் பிறகு பெரிய அரசுகள் இல்லை... பெரிய இலக்கியங்களும் இல்லை
வெளிநாட்டவர் வருகையில் நல்லதும் கெட்டதும் கலந்து நடந்த்து..

உலக மனித வாழ்க்கை அரசியல் சமூக அமைப்பு எல்லாம் மாறி...எல்லாரும் படிக்கலாம், எழுதலாம் என்கிறபோதுதான் புதுக்கவிதை வருகிறது...
இவ்வாறு, மனித வாழ்க்கை மாறும்போதெல்லாம் கவிதையின் உள்ளடக்க உருவ மாற்றம் –பாம்பு சட்டையை உரித்துக் கொள்வதுபோல- தொடர்ந்து நடந்திருக்கிறது...இப்போதும் நடக்கிறது.

இன்னார்தான் படிக்கலாம் என்ற பழைய அமைப்புத் தகர்ந்து யாவரும் படிக்கலாம் என்னும்போதுதான் எல்லாரும் எப்படியும் எழுதலாம் என்னும் புதுக்கவிதை தோன்ற முடியும் இல்லையா?
இப்படித்தான் கவிதை வரலாறும் மனித தமிழ்ச்சமூக வரலாறும் கிட்டத்தட்ட ஒன்றாகவே மாறிமாறி –சில நேரம் ஒன்று இன்னொன்றை மாற்றிவிடும்படி- மாறி வந்த கதைதான் கவிதையின் கதை!


(முன்னுரை இன்னும் முடியவில்லை.. அடுத்த வாரம் பார்ப்போம்)

5 comments:

 1. கவிதையின் கதை அழகுற நடை போட்டு வளர்கின்றது. எப்படி இனக்குழுக்கள் உணவுத் தேவைக்கு வேண்டிச் சண்டையிட்டுப் பிரிந்து ஒரு சில குழுக்கள் இணைந்து ஒன்றாகிப் பின்னர் தலைவர், குறுநில மன்னர் மன்னர் என்று வளர்ந்து என்றெல்லாம் தமிழர் பண்பாடு பற்றிப் படித்த போது அறிந்திருந்தாலும் எவ்வாறு கவிதை மக்களுக்கு அறியவந்துக் கலந்தது, என்ற சுவாரஸ்யமான தகவல்கள் பல அறிய முடிகின்றது. அருமையான தொடர். தொடர்கின்றோம் ஐயா, அண்ணா...

  ReplyDelete
 2. நீண்ட முன்னுரையாயினும் தேவையான முன்னுரை என்பதை உணரமுடிகிறது. நன்றி.

  ReplyDelete
 3. தமிழ் இலக்கிய வரலாற்றின் சிறப்பான பக்கங்களாக எதிர்காலத்தில் தங்கள் பதிவுகள் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை.

  கவிதை ஊர்தி என்ற தலைப்பில் 2011 ஆம் ஆண்டு நான் எழுதிய பதிவைத் தங்கள் பாா்வைக்காகத் தருகிறேன்.

  http://www.gunathamizh.com/2011/08/blog-post_03.html

  ReplyDelete
 4. கவிதையின் கதைக்கான நுழைவாயிலே பல கருத்துச் சிற்பங்களைத் தாங்கி அணிவகுத்து நிற்கின்றன. பாம்பு தோலுரித்துக் கொள்வது போல தமிழ்க் கவிதையின் உருவ உள்ளடக்கங்கள் மாறிக்கொண்டேவந்துள்ளன. செவ்வியல் இலக்கியங்களுக்கு நாட்டுப்புறப்பாடல்களே மூதாதையர்களாக விளங்கியுள்ளன. முன்னுரை தொடரட்டும். என்னுரை முடிக்கின்றேன். நன்றி ஐயா.

  ReplyDelete