தொடரும் நண்பர்கள்...

Sunday, January 17, 2016

கவிதையின் கதை முன்னுரை

உலகின் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று என்பதைப் பலரும் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் நான் கண்ட பெருமை என்பது, வேறெந்த மொழியிலும் கிடைக்காத, ஆதிமனிதர்களின் வாழ்க்கை குறித்த பதிவுகள் தமிழில் கிடைத்திருப்பதே!

இந்திய மொழிகளில்  தமிழ்போல் பழைய மொழியாக வடமொழியைச் சொல்கிறார்கள். ஆனால் வடமொழியை வழக்கில் யாரும் பேசுவதில்லை, வழக்கிலும் இருந்ததில்லை. வேதங்களில் வாழ்வதாகச் சொல்லப்படும் வடமொழியின் பொருளே திருத்தப்பட்டது –“சமஸ்கிருதம்“- என்பதாலேயே அப்பெயர் பெற்றது என்பர். ஆனால், பழந்தமிழ் இலக்கணமாம் தொல்காப்பியப் பாயிரத்திலேயே “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி..“ என வந்துள்ளதால், வழக்குமொழியே (Spoken Language)  எந்தமொழிக்கும் முன்னத்தி ஏர் எனலாம்.

தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகியவை தமிழிலிருந்தே சற்றேறக்குறைய 1,000 ஆண்டுகளின் முன்னர்த் தோன்றியிருக்கலாம் என்பதை இம்மொழிகளுக்குள் கிடக்கும் ஒற்றுமையால் மட்டுமல்ல, பழந்தமிழர் வரலாற்றாலும் அறியலாம். பண்டைச் சேர நாடே இன்றைய கேரளம் என்பதைச் சிலப்பதிகாரத்தாலும், பதிற்றுப் பத்து எனும் சங்க இலக்கிய நூல்வழியாகவும் அறியலாம். இதையே மனோண்மணீயம் எழுதிய பேராசரியர் பெ.சுந்தரனார் –
“கன்னடமும், களிதெலுங்கும், கவின்மலையா ளமும்,துளுவும்
உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!“  என்று எழுதி யிருப்பதனாலும், அறிஞர் கால்டுவெல் எழுதியிருக்கும் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்நூல்வழியாகவும் அறியலாம்.

ஆக, 
இந்தியாவின் வேறெந்த மொழிக்கும் இல்லாத பெருமை என்று நான் கருதுவது, மனிதகுல வரலாற்றின் தொடக்கக் காலச் செய்திகளை உடைய மொழி தமிழ்மொழி ஒன்று மட்டுமே என்பதே ஆகும்.

உதாரணமாக –
மனிதகுல வரலாறு கூறுவோர், மனிதனின் ஆதி வரலாற்றை நான்கு வகை வாழ்க்கையாக வகுத்துச் சொல்கிறார்கள் -
(1)    உணவு தேடும் நிலை
(2)    வேட்டை நிலை
(3)    உணவு பயிரிடும் நிலை
(4)    உபரி கண்டு வணிகம் தோன்றிய நிலை
இவை நான்குமே தமிழ் இலக்கணத்தில் வரும்
(1)    குறிஞ்சி – உணவு தேடும் மலைசார்ந்த மக்கள் நிலை
(2)    முல்லை – வேட்டையாடும் காடுசார்ந்த வாழ்க்கை
(3)    மருதம் – உணவு பயிரிடும் வயல்சார்ந்த வாழ்க்கை
(4) நெய்தல் – வணிகம் (உபரி)கண்ட கடல்சார் வாழ்க்கை
என இதனைச் சொல்லலாம். ஐந்தாவதான பாலை தமிழ்நாட்டில் இல்லை என்பதாலேயே பாலை தவிர்த்த நான்கு நிலத்தையுமே “நானிலம்“ என –உலகமெனும் பொருளில்- சொல்வதுண்டு. (பின்னர் மற்ற இடங்களில் பாலை இருப்பதால், ஐந்து நிலப்பிரிவுகளாகத் தமிழர் சொல்வாராயினர்)

தமிழிலக்கிய வரலாறே மனிதகுல வரலாற்றைக் கூறுவதாக உள்ளது, அப்போதிருந்த இலக்கிய வடிவம், கவிதையன்றி வேறில்லை என்பதால் தமிழ்க் கவிதையின் வரலாறே, மனிதகுல வரலாறு கூறுவதாக உள்ளது என்பதையும் அறிய முடிகிறது.

எனவே, கவிதையின் கதையே மனிதனின் கதை என்பதை கவிதை மாற்றங்களுக்கும், சமூகமாற்றங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளின் வழியாகப் பயணம் செய்தால், எளிதில் காணலாம்.

சரி, தமிழ்ச்சமூக வரலாறும் தமிழ்க் கவிதையின் வரலாறும் இணைந்தே இருப்பத்தைக் கொஞ்சம் பார்த்துவிட்டு, பிறகு நூலுக்குள் போகலாமா?

(அடுத்த பதிவுக்கு ஓரிருநாள் காத்திருங்கள்)

28 comments:

  1. தமிழ் மொழியின் அருமை பற்றியத் தகவல்கள் மேலும் மேலும் அறிந்துகொள்ளக் காத்திருக்கிறேன், நன்றி அண்ணா.
    உங்கள் கவிதையின் கதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா.

    ReplyDelete
  2. மாபெரும் இலக்கியத் தொண்டினை தனி ஒருவராக ஏற்று நடத்த திட்டமிட்டு செயலிலும் இறங்கி விட்டீர்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. போற்றுதலுக்கு உரிய பணியினைச் செவ்வனே திட்டமிட்டு
    தொடங்கியுள்ளீர்கள்
    தங்களின் 25ஆண்டுகால உழைப்பு தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கட்டும்
    தொடர்கிறேன் ஐயா

    ReplyDelete
  4. சிறப்பிற்கு சிறப்பு சேர்க்கும் முயற்சிக்கு வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  5. இந்த நாளே..திருநாள்...உங்கள் புத்தகம் வரும் நாளுக்காய் காத்திருக்கிறோம்..
    வணங்குகிறோம்...

    ReplyDelete
  6. அன்புத்தங்கை கிரேஸ், முனைவர் அய்யா பழனி கந்தசாமி, கரந்தை நண்பர் ஜெயக்குமார், வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன், அன்புத் தோழர் மீரா.செல்வக்குமார் ஆகியோர்க்கு நன்றியும் வணக்கமும். உள்ளடக்கம், மொழி நடை, தொழில்நுட்பம் தொடர்பான நல்ல ஆலோசனைகளை இன்னும் எதிர்பார்க்கிறேன். நன்றி

    ReplyDelete
  7. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! உங்களது சீரியபணி தமிழ் இலக்கிய வரலாற்றில் – குறிப்பாக கவிதை வரலாற்றில் – தனித்ததோர் இடம் பெற்றிடும் என்பதில் ஐயமில்லை. பணி வெற்றியடைய வாழ்த்துக்கள். அடுத்தவர்களுக்காக காத்திராமல், காலம் தாழ்த்தாது நூலினை சீக்கிரம் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.




    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      “...பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து”

      Delete
  8. ஐயா வணக்கம்.

    தங்களின் வாசிப்பை, ரசனையை, அறிவை, அனுபவத்தை, எழுத்துகளின் வாயிலாக என் போன்ற எண்ணற்றோர் மனதினில் இறக்கி வைப்பதும், பாடுகளோ முயற்சியோ இன்றி உங்கள் உழைப்பை நாங்கள் துய்க்கப்போவதும் நினைக்க மகிழச்சிதான். இது ஆசிரியர் ஒருவரிடமிருந்து மாணவர் அடையும் மகிழ்ச்சி.

    இது சேவை.

    தொடரட்டும்.

    நம் தமிழில் நன்னூலொன்று தோன்றி நெடுங்காலமாயிற்று என்னும் குறையை இந்நூல் நீக்குமென மனதார நம்புகிறேன்.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் விஜூ. உங்களிடமிருந்து அவ்வப்போது கருத்துகள் வரும் என்று நம்பியே தொடங்குகிறேன். மற்றபடி “யானா நடாத்துகின்றேன்..?” (இல்லன்னா புத்தகமாப் போட்டு கையில குடுத்துட்டுப் போக மாட்டேனா என்ன?) பெரிய பணி. முடிந்தவரை சரியாகச் செய்ய நினைக்கிறேன். அவ்வளவே.

      Delete
  9. கவிதையின் கதையின் முன்னுரை சுவாரஸ்யம்! நானிலம் குறித்த விளக்கம் அருமை! நன்றி!

    ReplyDelete
  10. அன்புள்ள அய்யா,

    வணக்கம். ‘கவிதையின் கதை’ தமிழ் எழுத்துலகில் ஒரு புதிய முயற்சி என்றால் அது மிகையில்லை. தங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும் நாளை எண்ணி மகிழ்கிறோம்.

    மனிதனின் ஆதி வரலாறு தமிழ் இலக்கணச் சான்றோடு ஆரம்பமாகிறது... தொய்வின்றித் தொடரட்டும்.

    தமிழ்க்கவிதைகள் பற்றிய வரலாற்று உண்மைகளைத் தமிழ்மக்கள் படித்துப் பயன் அடைய வேண்டுமென ‘கவிதையின் கதை’யை வாழ்த்தி வரவேற்கின்றோம்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களன்பிற்கு நன்றி அய்யா. புதிய முயற்சி என்று சொல்ல முடியாது. சங்க இலக்கியம், அறநூல்கள், பேரிலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், சித்தர்கள், புதுக்கவிதை, அய்க்கூ எனத் தனித்தனி ஆழ்ந்த ஆய்வுகள் வந்துள்ளன. இவற்றினூடாக உள்ள கவிதையின் உருவ-உள்ளடக்க மாற்றத்திற்கு உள்ள சமூகப் பின்புலத் தொடர்புகளை ஓரிழையில் பார்க்கும் முயற்சியே எனது. தங்களைப் போன்ற ஆர்வலர்களின் கருத்து இதனைச் செழுமைப் படுத்துமென நம்புகிறேன். தொடர்ந்து சொல்லுங்கள் அய்யா. நன்றி

      Delete
  11. பூர்வாங்கமே நூலின் முழுவடிவு
    எப்படி இருக்கும் என்பதை உணரச் செய்து [
    பிரமிப்பூட்டுகிறது

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களைப் போலும் ரசனையும் பட்டறிவும் மிக்க நல்லோரின் கருத்து எனக்கு மிகவும் உதவும் அய்யா. அவ்வப்போது எழுதுங்கள். நன்றி.

      Delete
  12. ஆஹா! கவிதையின் கதை என்று கவித்துவமாய் தலைப்பிட்டு அழகான தமிழ் அன்னையைப் பற்றிய கதையை வரலாற்றைத் தங்களின் வழி அறிவதற்குக் காத்துக் கொண்டிருக்கின்றோம். அவளிடமிருந்துப் பிறந்தவைதானே மற்ற தென்னகத்து மொழிகள்! அதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இல்லை இல்லை!!! கேரளத்து மொழியில், தமிழில் வழக்கொழிந்தச் செந்தமிழ் சொற்கள் நிறைய விரவிக் கிடக்கின்றன.

    தமிழின் பெருமை மேலும் பெருகிடச் செய்யும் தங்களுக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள்! ஐயா/அண்ணா. ஒயிலாய் அழகு நடை போடும் தமிழன்னையைத் தொடர்கின்றோம் நாங்களும்.

    ஒரு சின்ன வேண்டுகோள். மின் அஞ்சல் பதிவு செய்திட பெட்டி வைக்க முடியுமா? எங்கள் மின் அஞ்சலை அதில் பதிவு செய்துவிட்டால் எங்கள் பெட்டிக்கே வந்துவிடுமே அதனால்தான்.

    மிக்க நன்றி ஐயா/அண்ணா. தொடர்கின்றோம்

    ReplyDelete
    Replies
    1. வரவேற்றுக் கருத்திட்டமைக்கு நன்றி தங்கையே, நண்பரே! திருத்தம் செய்துவிடுகிறேன் (நண்பர்கள் உதவியுடன்தான் செய்யவேண்டும். நமக்குததான் அந்த அறிவு வளரமாட்டேங்குதே!)

      Delete
  13. அருமை ஐயா..இன்றைய சூழலில் தமிழர் தனது தாய்மொழிக்கு முக்கியத்துவம் தவேண்டும் என்பது எனது கருத்து அனைத்து மொழிக்கும் அடிப்படையான தமிழ் மொழியை அனைவரும் உணர வேண்டும் ஐயா.அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன் ஐயா..நன்றி..

    ReplyDelete
    Replies
    1. “இன்றைய சூழலில் தமிழர் தனது தாய்மொழிக்கு முக்கியத்துவம் தவேண்டும் என்பது எனது கருத்து” சரிதான் அம்மா! சிறிய திருத்தம் இன்றைய சூழலில் மட்டுமல்ல, என்றைய சூழலிலும் இது பொருந்தும். தொடர்கருத்திற்கு நன்றிம்மா. கணித்தமிழ் வளர்க்கும் அய்யா இரா.குணசீலன் அவர்களுக்கு என் வணக்கத்தைச் சொல்லுங்கள்.

      Delete
    2. உண்மை தான் ஐயா என்றைய சூழலிலும் தமிழ் மொழிக்கு அனைவரும் தலை வணங்கி வரவேற்போம் ஐயா.கட்டாயம் சொல்லிவிடுகிறேன் உங்கள் வணக்கத்தை அய்யா..

      நன்றி..

      Delete
  14. அருமையான பொருண்மையில் மிகச் சிறப்பான ஆரம்பம். பதிவு மூலம் பல அரிய தகவல்களை அறியமுடிகிறது.வழக்குமொழி என்பதற்கு ஆங்கிலத்தில் Spoken Language என்று கூறியுள்ளீர்கள். அது பேச்சுமொழி என்றல்லவா இருந்திருக்கவேண்டும். தெளிவுபடுத்தவேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பேச்சுமொழியைத்தானே வழக்கில் புழங்குகிறோம்? “வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்” என்று பனம்பாரனார் சொல்வதும் இதுதானே அய்யா?

      Delete
  15. நல்ல முயற்சி. வாழ்நாள் பணி என்று தாங்கள் சொல்வதிலிருந்தே அதனை எவ்வளவு தூரம் மிக முக்கியமானதாகக் கருதியிருக்கிறீர்கள், தொடர்ந்து தகவல் சேகரிப்பில் இருந்திருக்கின்றீர்கள் என்பது புரிகிறது. தொடரட்டும், தாங்கள் தாமதித்தாலும் தங்கள் இணையர் தோழியர் மல்லிகா தாமதிக்க விட மாட்டார்கள். ஊக்க சக்தியாக இந்தப் பணியை முடிக்க துணை நிற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்த்துக்கள், தொடருங்கள், நாங்களும் தொடர்கிறோம். தனித்தன்மையோடு வரும் தொடரை படிக்க விழைகிறோம் .... முனைவர்.வா.நேரு , தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம், மதுரை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே நலம்தானோ? உடல்நலம் பேணுக. வால்காவிலிருந்து கங்கை வரை படித்திருப்பீர்கள். அந் நூல்தான் இந்நூலுக்கான தூண்டல், துணை எல்லாம். பார்த்துச் சொல்லுங்கள்

      Delete
  16. கவிதையின்ன் கதை தமிழனின் கதையே என்பதில் மறுப்பேதும் இல்லை அண்ணா...தமிழ் இலக்கிய வரலாற்றில் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் ....முயற்சி...வெற்றிமகள் உங்களிடமே உள்ளபோது...விரைவில் நூலைக்காணும் ஆவலில் நான்..

    ReplyDelete
  17. காலந்தோறும் மாறிய கவிதை வடிவங்கள் தமிழர்தம் நுகா்வுக் கலாச்சாரத்தையும், மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்களை மட்டும் பதிவுசெய்யவில்லை. தமிழ் தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் இயல்பையும் காட்டுவதாகவே தோன்றுகிறது. எத்தனை எத்தனை பண்பாட்டு, மொழித்தாக்கங்களையும் கடந்து இன்றும் தமிழ் நிலைத்து நிற்கிறது. அதற்கு தமிழ் தன்னைத் தானே காலத்துக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளும் பண்பும் ஒரு காரணமன்றோ!

    தங்கள் தேடல் வெற்றி பெறவும். இந்நூல் தமிழ் இலக்கிய வரலாற்றின் அடிப்படைச் சான்றாகவும் அமைய வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  18. கற்றுக் கொள்ளல் இத்தனை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் என நினைக்கவே இல்லை. கவிதையின் கதை குறித்தான உங்கள் பதிவு வாசிக்கும் என்னைப் போன்றோரின் அறிவை, புரிதலை விசாலப்படுத்துகிறது. இங்கு வந்து சேர்ந்தது கொஞ்சம் தாமதம் என்றாலும், உங்களின் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கையில் அழகாக நிகழ்கிறது கற்றல். தொடர்ந்து வாசிக்க ஆர்வமாக உள்ளேன்.
    நன்றிகள் ஆசானே! :)

    ReplyDelete
  19. ஐயா வணக்கம். உங்களின் வாழ்நாள் கனவு நனவாகும் நாள் நெருங்கிவிட்டது. கவிதையின் கதையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். மனிதகுல வரலாற்றுடன் நானிலத்தை விளக்கியுள்ள பாங்கு மிக நன்றாக உள்ளது. தொடர்ந்து இணைப்பில் இருக்கிறேன். நன்றி. கொ.சுப.கோபிநாத், இலந்தக்கோட்டை

    ReplyDelete